யாழ்ப்பாணம், வலிகாமம் பகுதியில் உள்ள புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 5) மக்கள் நடமாட்டம் உள்ள பகல் வேளையில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் வசிப்பவர்கள் நேற்று காலை 8:30 மணியளவில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் மதியம் 1:30 மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீட்டினுள் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பவுண் எடையுள்ள தங்க நகைகளும், 40,000 ரூபா ரொக்கப் பணமும் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய வலைவீசப்பட்டுள்ளது.