யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் தொகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அருகில் கறுப்பு நிறத்தில் வித்தியாசமான மண் படுக்கை ஒன்றும் கண்டறியப்பட்டது.
குறித்த பகுதியில் மனித எச்சங்கள் உள்ளனவா என நேற்றுமுன் தினமும், நேற்றும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போது, அங்கிருந்து நாணயக் குற்றி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விவரங்கள் ஆய்வுகளின் பின்னரே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 241 மனித என்புத் தொகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 240 தொகுதிகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்று விடுமுறை தினமாக இருந்தபோதிலும், நிபுணர்கள் குழு அரை நாள் வேலைத்திட்டமாகத் தங்களது ஆய்வுப் பணிகளைத் தொடரவுள்ளனர்.