உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனு மீதான மேலதிக சமர்ப்பிப்புகளை எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் தேதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் (Bench) முன்னிலையில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்றைய வழக்குக் நடவடிக்கைகளின் போது மேலதிக சமர்ப்பிப்புகளை (Submissions) முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக வாதப் பிரதிவாதங்களை ஜூலை 6 ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.