நயாகரா நீர்வீழ்ச்சி (Niagara Falls) நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நயாகரா பிராந்திய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பொலிஸாரின் தகவல்படி, வியாழக்கிழமை இரவு 8:50 மணியளவில் நயாகரா நீர்வீழ்ச்சி நகரின் ‘தொரோல்ட் ஸ்டோன்’ வீதி (Thorold Stone Road) மற்றும் ‘டோர்செஸ்டர்’ வீதிக்கு (Dorchester Road) அருகிலுள்ள இல்லம் ஒன்றிற்கு வந்த இரு சந்தேக நபர்கள், அங்குள்ள ஒரு ஆண் நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவர்களின் அடையாள விபரங்களைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் விபரங்கள்:
-
முதலாவது சந்தேக நபர் (ஆண்): சுமார் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர். 5 அடி 6 அங்குலம் உயரம், மெலிந்த உடலமைப்பு மற்றும் கறுத்த நிறத் தோல் கொண்டவர். அவர் ஒரு டி-ஷர்ட், அடர் நிறக் காற்சட்டை, காலணிகள், சன்கிளாஸ் மற்றும் தலையில் ஒரு சிவப்பு நிறப் பட்டாடை (Bandana) அணிந்திருந்தார்.
-
இரண்டாவது சந்தேக நபர் (பெண்): சுமார் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர். அடர் பழுப்பு நிறக் கூந்தல் மற்றும் பழுப்பு நிறக் கண்களைக் கொண்டவர். அவர் ஒரு சாம்பல் நிறத் தொப்பி வைத்த ஸ்வெட்ஷர்ட் (Hooded sweatshirt), தளர்வான நீல நிறப் பயிற்சி காற்சட்டை (Sweatpants) மற்றும் வெள்ளை நிறக் காலணிகளை அணிந்திருந்தார்.
இவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு அருகே புதிய மாடல் ‘வெள்ளை நிற நிசான் எஸ்.யு.வி’ (White Nissan SUV) ரக வாகனம் ஒன்றில் வந்து அதனை நிறுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் எச்சரிக்கையும் வேண்டுகோளும்:
“இந்தக் கொலை விவகாரம் தொடர்பான விசாரணைகளைக் கொலைக் குற்றப்பிரிவு (Homicide Unit) பொறுப்பேற்றுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டாலும், துப்பாக்கியுடன் தப்பியோடிய சந்தேக நபர்கள் இன்னும் பிடிபடாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் தங்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான இந்த நபர்களையோ அல்லது அவர்களின் வாகனத்தையோ கண்டால் உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறும், சந்தேக நபர்கள் உடனடியாக ஒரு சட்டத்தரணியை நாடி பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.