புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை பொது தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும் , திமுக கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு விடயத்தில் உடன்பாடு தாமதமாக எட்டப்பட்டதால்.. பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் நேரடியாக மோதுகிறன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று ஒரே கட்டமாக முப்பது சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ்- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பிலும், பாஜக -என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
வேட்பு மனுவை திரும்பப்பெறும் நாள் நிறைவடைந்த பிறகு பல தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை திரும்ப பெறாமல் தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். இவர்களில் பல வேட்பாளர்கள் வீடு வீடாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், திமுக கட்சிக்கு 14 தொகுதிகளும் போட்டியிடுவது என பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. இதில் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதியில் உள் ஒதுக்கீடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி திமுக வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காலாப்பட்டு, ராஜ் பவன், மங்கலம், திருபுவனை, காரைக்கால் (தெற்கு) ஆகிய ஐந்து தொகுதிகளில் திமுகவும் ,காங்கிரஸ் கட்சியும் நேரடியாக மோதுகிறது. அத்துடன் உழவர்கரை , ஊசுடு , நெட்டப்பாக்கம் , ஏனாம் ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
மேலும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லாஸ்பேட்டை , திருபுவனை ஆகிய இரு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.