சென்னை: தமிழகத்தில் தேனி, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 18-ம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, செங்கல்பட்டு மாவட்டம் நியூ சென்னை டவுன்ஷிப்பில் 5 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 4 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சனிக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது.
இதன் காரணமாக, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 17-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 18, 19, 21, 22 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மே 20-ம் தேதி ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 18-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 19-ம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.