இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையும் முன்னிட்டு, 2027ஆம் ஆண்டில் இரு நாடுகளும் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடத் தயாராகி வருகின்றன.
இது தொடர்பாக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நேற்று இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் எதிர்வரும் இரு ஆண்டு நிறைவுகளையும் முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது.
அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.