கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய தனியார் பஸ் சாரதி ஒருவரைப் பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர், 120ஆம் இலக்க வழித்தடத்தில் ஹொரணை – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸை செலுத்திச் சென்றபோது, கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பஸ்ஸின் முன்பக்க வலது மூலையில் மோதியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மெட்ரோ பஸ்ஸின் வலதுபுறக் கண்ணாடியும், அதற்குக் கீழே அமைந்திருந்த ஜன்னலும் சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 342,000 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை, பொகுணுவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.