கோயம்புத்தூர்:
பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு அட்வைஸ்:
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிமுக தனது நிலைப்பாடு குறித்துச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தற்போது பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கூட்டணி குறித்துப் பார்ப்போம்; அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,” எனச் சூசகமாகத் தெரிவித்தார்.
தமிழகப் பிரச்சினைகள்:
தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வு, காவிரி நீர்ப் பிரச்சினை, இயற்கை பேரிடர்கள் குறித்து அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். கர்நாடக அரசு மேட்டூருக்கு உரிய தண்ணீரை வழங்கத் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அரிசி விலை உயர்வு, செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்,” என வலியுறுத்தினார்.
சிபிஐ விசாரணை:
“கனிம வளக் கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசுக்கு நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதால், மூத்த அதிகாரிகள் மூலம் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்,” எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
#AnbumaniRamadoss #PMK #TNPolitics #AIADMK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive