சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நான்கு விலங்கியல் பூங்காக்களுக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி, தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா, பின்னவளை யானைகள் சரணாலயம், பின்னவளை விலங்கியல் பூங்கா மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கு செல்லும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படவுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, குறித்த பூங்காக்களுக்கு செல்லும் சிறுவர்களுக்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் புதிய அனுபவங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.