ரூபாய் 60 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் சீன நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த சிகரெட் தொகையை, விமான நிலையத்தின் Green Channel ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்த சிகரெட் தொகையை சீனாவில் இருந்து கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்தே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளுக்குள் 40,000 சிகரெட்டுகளைக் கொண்ட 202 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சிகரெட் தொகையின் மொத்தப் பெறுமதி சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.