வங்கதேச அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், மகுரா-1 தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சகிப் அல் ஹசனின் பூர்வீக வீடு மகுரா நகரில் உள்ள Keshabmor பகுதியில் புதன்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய காணொளி ஊடக சந்திப்பில் சகிப் அல் ஹசன் இணைய வழியில் கலந்துகொண்ட சில மணிநேரங்களிலேயே இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8:45 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டின் மீது கற்களை வீசிச் சேதப்படுத்தியதுடன், தீவைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் தெற்குப் பக்க இரும்பு வாயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இதனால் பல ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
புது தில்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கழகத்தால் (Foreign Correspondents’ Club of South Asia) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி ஊடக சந்திப்பிலேயே சகிப் அல் ஹசன் கலந்துகொண்டிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய ஷேக் ஹசீனா, 2024 ஜூலை – ஆகஸ்ட் காலப்பகுதியில் நடைபெற்ற மாணவர் எழுச்சியைத் தற்காத்துப் பேசியதுடன், அது தன்னிச்சையான போராட்டம் அல்ல மாறாகத் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
சகிப் அல் ஹசன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என அவாமி லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கான உறுதியான காரணமோ அல்லது குற்றவாளிகளோ இதுவரை பொலிஸாரால் அடையாளம் காணப்படாத நிலையில், தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.