கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல்சார் உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிரான்ஸ் முதலீட்டாளர்களை நாட்டிற்குள் ஈர்ப்பதற்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையில் அமைச்சக வளாகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ‘CMA CGM’ இன் முதன்மை பிரதித் தலைவரும், பிரான்சின் கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாக நிபுணருமான கிறிஸ்டின் கபோ தலைமையிலான பிரான்ஸ் முதலீட்டாளர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும், இதில் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் பிரான்ஸ் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி பிரான்ஸூக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்கள், சிஎம்எ சிஜிஎம் (CMA CGM) நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரொடோல்ப் சாடேவை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கிறிஸ்டின் கபோ, தமது நிறுவனம் உலகெங்கிலும் 65 க்கும் மேற்பட்ட கொள்கலன் முனையங்களை இயக்கி வருவகிறது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் குறித்து எமது நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், தற்போது கிழக்கு முனையத்திற்கு வரும் கொள்கலன்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தமது நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதால் இந்தத் திறனை மேலும் அதிகரிக்க முடியும். தமது நிறுவனத்தின் விமான சரக்கு போக்குவரத்துப் பிரிவு மூலம் இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த விரும்புகிறேன் என்றார்.
இறுதியாக, கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச முதலீட்டாளர்கள் அங்கீகரித்துள்ளமைக்கு அமைச்சர் அநுர கருணாதிலக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.