யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) பணியாளர்களும் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆரம்பத் தகவல்களின்படி, எரிபொருள் தாங்கிகள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் உள்ள உலர்ந்த புதர்கள் மற்றும் புற்கள் நிறைந்த வெற்றுக்காணியில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ வேகமாக பரவியபோதிலும், உடனடியாக முன்னெடுக்கப்பட்ட தீயணைப்பு நடவடிக்கையால் அது எரிபொருள் களஞ்சியப் பகுதிக்குள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் தெரிவிப்பதாவது, எரிபொருள் களஞ்சியத்தைச் சூழவுள்ள வெற்றுக்காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அவற்றில் குப்பைகள் கொட்டப்படுவதும், உலர்ந்த புற்கள் அடர்த்தியாக வளர்ந்திருப்பதும் தீ விபத்துகளுக்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இந்த நிலைமை குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் பலமுறை வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்திருந்த போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தீ விபத்து தொடர்பாகவும் உடனடியாக அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், பிரதேச சபையிடமிருந்து துரிதமான நடவடிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், “இப்பகுதியில் தீ மூட்ட வேண்டாம்” என்ற எச்சரிக்கை பதாகைகளை நிறுவுமாறு காங்கேசன்துறை உப பிரதேச அலுவலக பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அதற்காக எழுத்து மூல கோரிக்கை அனுப்புமாறு பதிலளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எரிபொருள் களஞ்சியம் அமைக்கப்பட்டபோது, சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், சர்வதேச தரத்திற்கேற்ப தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நினைவூட்டுகின்றனர்.
ஆனால் தற்போதைய நிலையில், எரிபொருள் களஞ்சியத்தைச் சுற்றி சாதாரண கம்பி வேலிகள் மட்டுமே காணப்படுவதாகவும், தீ பரவிய பகுதி எரிபொருள் தாங்கிகளுக்கு மிக அருகில் அமைந்திருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தீயை விரைவாக கட்டுப்படுத்தியதாலேயே பெரும் வெடிப்பு அல்லது உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், எரிபொருள் களஞ்சியத்தைச் சுற்றி உயரமான பாதுகாப்பு மதில்கள் அமைப்பதுடன், வெற்றுக்காணிகளை முறையாக பராமரித்து, தீ பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தரசாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தீ பரவலுக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை உயிரிழப்பு அல்லது எரிபொருள் களஞ்சியத்திற்கு சேதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.