கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப் போட்டிகளில், தொடர்ந்து 5 மணி நேரம் அசையாமல் பிளாங்க் (Plank) நிலையில் இருந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இந்த 61 வயது பாட்டி, ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 மணி நேரம் 30 நிமிடங்களுக்குப் பிளாங்க் நிலையில் இருந்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே தகர்த்து, 5 மணி நேரம் பிளாங்க் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தனது 12 பேரக்குழந்தைகளும் நேரில் வந்து உற்சாகப்படுத்தியதே இந்த அசாத்திய சாதனைக்கு முக்கிய காரணம் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தீராத நாள்பட்ட வலியால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், கடுமையான பயிற்சியின் மூலம் டோனாஜீன் வைல்ட் நிகழ்த்திய இந்த இமய சாதனை, உலக அளவிலான விளையாட்டு ரசிகர்களைப் பிரமிக்க வைத்துள்ளது.