மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கு இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மே 04 அன்று இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி முய்ஸுவுக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று (05) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் விடுத்த கூட்டு ஊடக அறிக்கையில், தங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களின் பெறுபேறுகள் குறித்து விளக்கமளித்தனர்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி முய்ஸு, மே 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். 2023 இல் பதவியேற்ற பிறகு அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் மே 06 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்