தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியமை குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி ராஜதந்திர நெறிமுறைகளை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவித்ததைக் கண்டு தாம் “வியப்படைவதாக” ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில், இதுபோன்ற வாழ்த்துச் செய்திகள் பொதுவாக சக நாடுகளின் தலைவர்களுக்கே அனுப்பப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு மாநில அல்லது மாகாணத் தலைவர்களுக்கு அல்ல என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட அண்மையில் பதவியேற்ற ஏனைய இந்திய மாநிலத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அநுர ஏன் இது போன்ற வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி அநுர, “இலங்கையும் தமிழ்நாடும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இந்தியா-இலங்கை இடையிலான விரிவான கூட்டாண்மையின் கீழ் வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.