செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
அதில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கை தொடர்பில் காரசாரமான கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையாகவுள்ள சட்டத்தரணிகள் முன் வைக்கும் சாத்தியம் உண்டு.
அதேவேளை கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சேவிடம் விசாரணைகளை மேற்கொண்டு , வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தது.
அதன் அடிப்படையில் சோமரத்ன ராஜபக்சேவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் பெற்ற வாக்கு மூலங்கள் தொடர்பான விபரங்களை இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசாரணையில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மாத்திரமின்றி புதைகுழியின் கால எல்லையை அறிவதற்காக கார்பன் (C – 14) பரிசோதனைகளை செய்வதற்கான அனுமதியை கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிய போது நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் வழக்கில் ஆராய்வதாக மன்று கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் அது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இறுதி கட்டங்களில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இன்றைய வழக்கு விசாரணையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்