ஈழத்தின் முக்கியமான நவீன தமிழ் கவிஞர்களில் ஒருவரும், மகாகவி து. உருத்திரமூர்த்தியின் மகனுமான பேராசிரியர் சேரன் 66 ஆவது வயதில் காலமானார்.
உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நவம்பர் 18ஆம் திகதி கனடாவின் ரொரண்டோவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த சேரன், சிறுவயதில் இருந்தே இலக்கிய சூழலில் வளர்ந்தவர்.
அவரது தந்தை மகாகவி உருத்திரமூர்த்தி ஈழ தமிழ் கவிதை உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவராவார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற சேரன், பின்னர் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
கவிதை, கட்டுரை, நாடகம் மற்றும் ஆய்வு துறைகளில் ஆளுமையை வெளிப்படுத்தியவர். 1980களில் இலங்கையில் இடம்பெற்ற போர், இட பெயர்வு, இழப்பு மற்றும் ஈழ தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களை அவரது கவிதைகளில் ஆழமாகப் பதிவு செய்தார்.
இலக்கிய பங்களிப்புகள்
‘இரண்டாவது சூரிய உதயம்’, ‘யமன்’, ‘கானல் வரி’, ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ உள்ளிட்ட பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1985ஆம் ஆண்டு கவிஞர் முருகையனுடன் இணைந்து தொகுத்த ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதை தொகுப்பு ஈழ தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது.
ஈழத்தின் இலக்கிய அடையாளத்தை சர்வதேச அளவில் எடுத்து சென்ற கவிஞராகவும், கல்வியாளராகவும் விளங்கிய சேரனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்.
இவரின் மறைவுக்கு இலக்கிய ஆர்வலர்களும் உலக தமிழர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.