சீனாவில் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்புப் பேச்சுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.
ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், ட்ரம்பும் புடினும் நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்துள்ளனர். ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் ஷென்சென் நகரைச் சென்றடைந்தபோது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் விமான நிலையத்திற்குச் சென்று அவரை வரவேற்றார்.
விமான நிலையத்தில் ட்ரம்பும் ஷி ஜின்பிங்கும் கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரையொருவர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாநாட்டின் வரவேற்பு நிகழ்வுக்கு முன்னதாக ட்ரம்ப், புடினையும் சந்தித்து சம்பிரதாயமான உரையாடலில் ஈடுபட்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை ட்ரம்பும் புடினும் தனிப்பட்ட பேச்சில் ஈடுபடவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது உக்ரைன் போர் தொடர்பாக முக்கியமாகக் கலந்துரையாடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த APEC மாநாட்டின் முக்கிய எதிர்பார்ப்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான முத்தரப்புப் பேச்சு அமைந்துள்ளது. இந்த மூன்று தலைவர்களும் ஒரே நேரத்தில் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துகின்றமை இதுவே முதல் முறையாகும்.
பேச்சுக்கான முழுமையான நிகழ்ச்சி நிரல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், உக்ரைன் மற்றும் ஈரான் போர்கள், அணுவாயுதப் பரவல், வர்த்தக முரண்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடினுக்கும் ட்ரம்புக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு வெறும் பரஸ்பர வாழ்த்துப் பரிமாற்றமாகவே அமைந்ததாகவும், இதுவரை எந்தவொரு ஆழமான பேச்சும் இடம்பெறவில்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள ட்ரம்ப், புடின், ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.