தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களில் 20 ஆயிரத்து 881 கோடி ரூபாயை தவெக அரசு கடனாக வாங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போதும், ஆட்சிக்கு வந்த பிறகும் எங்கள் மீது கடன் சுமை இருப்பதாகப் பொய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் செய்துகொண்டிருப்பது என்ன? இது முதலமைச்சருக்குத் தெரியுமா?” என்று கேள்விகளை எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், தவெகவினர் டெல்லி போராட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் சினிமா கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கடுமையாக விமர்சித்தார். திரைப்பட டிக்கெட் விவகாரம் மற்றும் பல மடங்கு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதைக் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு கல்வி நிறுவனங்களில் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசு மௌனம் காப்பதாகவும் குற்றம் சாட்டினார். திமுக தலைவர் ஆட்சியைப் பற்றி மக்கள் இப்போது பெருமையுடன் நினைக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், தவெக அரசின் நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#GeethaJeevan #DmkVsTvk #TamilNaduDebt #Kovilpatti #VijayGovernment #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #OppositionCritique #CauveryIssue #PoliticalNews #TamilNewsLive