பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து த.வெ.க-வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது ‘அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின்’ தலைமை ஒருங்கிணைப்பாளராக பி. பிரசாத் என்பவரை நியமித்து ரசிகர் மன்ற அமைப்புகளை தீவிரமாக மறுசீரமைத்து வருகிறார். இந்த திடீர் நகர்வு அவர் அரசியலில் களமிறங்குவதற்கான ஆயத்தமா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நடைபெற்ற ‘சட்டமன்றம்’ சார்ந்த நிகழ்வை நெறிப்படுத்திப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “பிரச்சனைகளும் சவால்களும் வரும்போது எதிர்தரப்பு மீது பழியைப் போட்டுவிட்டுக் களத்தை விட்டுத் தெறித்து ஓடுவது ஒரு தலைவனுக்கு அழகல்ல” என்று கூறியது மறைமுகமாக விஜயை விமர்சிப்பதாக த.வெ.க-வினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் விஜய் சேதுபதியின் கருத்து பெரும் சர்ச்சையானது.
இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில் “பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகள் முற்றிலும் பொழுதுபோக்கு சார்ந்தவை மட்டுமே. நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர்களையோ, அரசியல் இயக்கங்களையோ அல்லது அமைப்புகளையோ மையப்படுத்தி இந்த கருத்துகள் பேசப்படவில்லை. எனவே, இதை வெளியுலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறானது” என்று விளக்கம் அளித்தது.