2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நிர்ணயித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் காணொளித் தொழில்நுட்பம் (Video Conferencing) ஊடாக முன்னிலையாகிச் சாட்சியமளித்ததுடன், அவரது சாட்சியங்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக, இவ்வழக்குத் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணையவழி (Online) ஊடாகக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.