கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிப்பவர்களைத் தடுக்கும் விசேட நடவடிக்கையின் போது, திருடப்பட்ட வாகனமொன்று பொலிஸ் ரோந்து வாகனத்தின் மீது வேண்டுமென்றே மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிணை விடுதலையில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 26) அதிகாலை 2.00 மணியளவில், வீடு புகுந்து கொள்ளையடிப்பதைத் தடுக்கும் ‘புரொஜெக்ட் ஹைட்’ (Project HIDE) நடவடிக்கையின் கீழ் 32 ஆவது பிரிவு பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது லோரன்ஸ் அவென்யூ மேற்கு (Lawrence Avenue West) மற்றும் டஃபரின் வீதி (Dufferin Street) பகுதியில் சாம்பல் நிற ஹோண்டா சி.ஆர்-வி (Honda CR-V) வாகனமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததை அவதானித்த பொலிஸார், அது திருடப்பட்ட வாகனம் என்பதை உறுதிப்படுத்தினர்.
குறித்த வாகனத்தைக் கண்காணித்தவாறு ஜேம்ஸ்டவுன் கிரெசன்ட் (Jamestown Crescent) பகுதி வரை பின்தொடர்ந்த பொலிஸார், அதனைச் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். இதன்போது திருடப்பட்ட வாகனத்தின் சாரதி, அடையாளமிடப்பட்ட பொலிஸ் வாகனத்தின் மீது வேண்டுமென்றே மோதியுள்ளார். இச்சம்பவத்தின் காட்சிகள் பொலிஸ் வாகனத்தின் டேஷ் கமெராவில் (Dash camera) பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிராம்ப்டனைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரும், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களையும் வாகனத்தையும் சோதனையிட்ட பொலிஸார், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட நான்கு குளோக் (Glock) அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட அனைத்துத் துப்பாக்கிகளிலும் 50 தோட்டாக்களைக் கொள்ளக்கூடிய தடைசெய்யப்பட்ட அதிக கொள்ளளவு கொண்ட மகசின்கள் (Overcapacity magazines) பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஏற்கனவே வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 19 வயது இளைஞர் மீது திருடப்பட்ட சொத்தை வைத்திருந்தமை, வாகனத்தில் சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருந்தமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஏனைய இரு சிறுவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த 32 ஆவது பிரிவு பொலிஸ் பரிசோதகர் போல் ரிங்கோஃப் (Insp. Paul Rinkoff), வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்காக இரவு 8.00 மணி முதல் காலை 7.00 மணி வரை விசேட ரோந்துப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இம்மூவரையும் கைது செய்து துப்பாக்கிகளைக் கைப்பற்றியதன் மூலம் பாரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 32 ஆவது பிரிவு பொலிஸாரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள ரொறன்ரோ பொலிஸ் மா அதிபர் மைரோன் டெம்கிவ் (Myron Demkiw), இந்த ஆண்டில் இதுவரை 500 இற்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நகரில் துப்பாக்கி வன்முறைகளைத் தடுக்கத் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்