நீரிழிவு நோய் (சலரோகம்) தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (28.11.2026) யாழ்ப்பாணத்தில் 5 கிலோமீற்றர் விழிப்புணர்வு நடைப்பயணம் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண அகஞ்சுரப்பியல் பிரிவு, யாழ். நீரிழிவு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணத் தாதியர் பயிற்சிக் கல்லூரி சமூகத்தினர் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, ஆசிரியர் குணசீலன் மற்றும் ஆசிரியர் லலிசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இன்று உலகளவில் சுமார் 59 கோடி மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். இலங்கையில் 2018–2019 தேசிய சுகாதார ஆய்வின்படி, வயது வந்தவர்களில் சுமார் 23 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலும் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் எடை மற்றும் பரம்பரைக் காரணிகள் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகும்.
நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாவிடின் இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, பார்வையிழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடத்தல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அகஞ்சுரப்பியல் பிரிவு, நீரிழிவு மையம் மற்றும் ஏனைய விசேட மருத்துவப் பிரிவுகளின் ஊடாக நோயைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல், உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான ஆலோசனைகள், நோயினால் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது மாத்திரமன்றி, நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் எமது வைத்தியசாலையின் முக்கிய பணியாகும்.