கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பற்ற சட்டத்தின் (Bill 21) அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து கனடா உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கவுள்ளது. நவீன கனடிய ஜனநாயகத்தின் மிக முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றாக இது அமையக்கூடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
‘சட்டமூலம் 21’ (Bill 21) ஆனது, ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க சட்டத்தரணிகள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தலைப்பாகை (Turbans), ஹிஜாப் (Hijabs) அல்லது சிலுவைகள் போன்ற மதச் சின்னங்களை அணிவதற்குத் தடை விதிக்கிறது. அரசாங்கம் ஒன்றினால் பிரஜைகளின் மத உரிமைகளைப் பறிக்க முடியுமா என்பதே இவ்வழக்கின் மையக் கருத்தாக உள்ளது.
தனது சொந்தச் சட்டங்களை இயற்றுவதற்கான கியூபெக்கின் உரிமையே தற்போது ஆபத்தில் உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் போல் செயின்ட்-பியர் பிளாமொண்டன் (Paul St-Pierre Plamondon) வாதிடுகிறார். கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தால் பாதுகாக்கப்பட்ட சில உரிமைகளை மீறுவதற்குச் சட்டமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் ‘இருந்தபோதிலும் சரத்தை’ (Notwithstanding Clause – பிரிவு 33) பயன்படுத்தியே கியூபெக் அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்றியிருந்தது.
“நாம் அந்த அரசியலமைப்பிற்கு ஒருபோதும் உடன்படவில்லை. நாம் உடன்படாத அந்த அரசியலமைப்பு, மிகவும் தெளிவானதும் ஜனநாயக ரீதியானதுமான முடிவுகளை எடுக்கும் எமது பாராளுமன்றத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும்,” என பிளாமொண்டன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள், மத மற்றும் சிவில் உரிமைக் குழுக்கள் மற்றும் ஆங்கில மொன்றியல் பாடசாலை சபை ஆகியவற்றினால் இச்சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த அரசியலுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கனடிய முஸ்லிம்களின் தேசிய பேரவையின் (NCCM) பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் பிரவுன் (Stephen Brown) சுட்டிக்காட்டியுள்ளார்.
“கியூபெக் அரசாங்கம் தனது மதச் சிறுபான்மையினருக்கு எதிராக அமைதியாகப் பாகுபாடு காட்டுவதற்குத் தம்மைத் தனித்து விட வேண்டும் என விரும்புகிறது; ஆனால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை,” என அவர் கூறியுள்ளார். மேலும், “ஒரு அரசாங்கம் தாம் விரும்பும் போதெல்லாம் உரிமைகள் சாசனத்தை மீற முடியும் என்றால், எமக்கு ‘உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனம்’ இல்லை; மாறாக ‘பரிந்துரைகள் மற்றும் அனுமதிகளுக்கான சாசனமே’ உள்ளது,” எனவும் பிரவுன் விமர்சித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் அல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் உள்ளிட்ட மாகாணங்களும் இந்த ‘இருந்தபோதிலும் சரத்தை’ அடிக்கடி பயன்படுத்தி வருவதால், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா என்பதை அனைவரும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
இதேவேளை, கியூபெக் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் அமர்வதற்கு மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணையும் இன்றைய தினமே நடைபெறவுள்ளது. இது ஒரு பாரிய அரசியலமைப்பு நெருக்கடியைத் தூண்டக்கூடும் எனவும், கியூபெக் பிரிவினைவாதிகளுக்கு இது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வந்த நத்தார் பண்டிகையாக அமையக்கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர் ரஃபேல் மெலன்கோன் (Raphaël Melançon) குறிப்பிட்டுள்ளார்