ருசிரா செவ்வந்தி ரணசிங்க (Ruchira Sewwandi Ranasinghe) எனும் குறித்த பெண்ணை இலங்கைக்குத் திருப்பி அழைத்து வருவதற்கு வசதியாக, நியூசிலாந்தின் குடிவரவு இணை அமைச்சர் கெமரூன் ப்ரூவரின் (Cameron Brewer) தனிப்பட்ட தலையீட்டையும் விசேட மனிதாபிமானக் கரிசனையையும் கோரி தாம் உத்தியோகபூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் வெலிங்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பம் முதலே தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“நியூசிலாந்தின் குடிவரவுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளுக்கு முழுமையாக மதிப்பளிக்கும் அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில், ஆக்கபூர்வமான இராஜதந்திர ஈடுபாட்டின் மூலம் நடைமுறைச் சாத்தியமானதும் கருணையுடனானதுமான ஒரு தீர்வை எட்ட முடியும் என நாம் நம்புகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நலன் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக உள்ளதாகப் பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர மேலும் வலியுறுத்தினார். அத்துடன், குறித்த பெண்ணைப் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான இராஜதந்திர மற்றும் தூதரக வழிமுறைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.