மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம் (27.11.2026) மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததுடன், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
வருடந்தோறும் நடைபெறும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இம்முறையும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொதுத் தூபியில் இன்று (27.11.2026) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கம் போன்றே மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொதுத் தூபியில் இன்று மாலை 6.05 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
எனவே, அனைவரும் வருகை தருவதோடு மலர்கள் மற்றும் மாலைகளைக் கொண்டு வருமாறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு – வவுணதீவு விழாவெட்டுவான் பிரதேசத்தில் நேற்றைய தினம் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் த.கோபாலபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் த.டிசாந்த, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் தவிசாளர் சண்முகராசா, அகிலன் பவுண்டேசன் இணைப்பாளர் வீ.ஆர்.மகேந்திரன் உள்ளிட்ட மாவீரர் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவீரர்களை நினைவேந்தும் முகமாக ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், கரவெட்டி, மகிழவெட்டுவான், விழாவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களின் உறவுகளைக் கௌரவிக்கும் முகமாக அகிலன் பவுண்டேசன் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தது.
யாழ். பருத்தித்துறை பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதல் நிகழ்வாக மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஆகியோரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.