போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு, மனிதாபிமான அடிப்படையில் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூரும் வகையில் விசேடமாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அக்காலப்பகுதியில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் அனுமதி வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், உயிரிழந்த தமிழ் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் வினவியபோதே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
குறித்த பிரதேச சபை நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பங்கேற்றதை உறுதிப்படுத்திய அபேசிங்க, போரின் போது உயிரிழந்த அனைவருக்குமான ஒரு பொதுவான நினைவேந்தல் நிகழ்வாகவே அது அறிவிக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியான தகவல்களின்படி, பிரதேச சபைத் தலைவர் பொன்னையா குகதாசன் தலைமையில் சபையின் கேட்போர் கூடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுடன், போராளிகளாகச் செயற்பட்டு உயிரிழந்த தமது இரண்டு சகோதரர்களை இழந்த உறுப்பினர் கலைவாணி நிரந்தன் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார்.
இலங்கைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ள நிலையில், அவ்வமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கும், அமைப்பையோ பிரிவினைவாதத்தையோ ஊக்குவிப்பதற்கும் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனிநபர்கள் தமது உயிரிழந்த உறவினர்களுக்காகத் துக்கம் அனுஷ்டிக்கவும், அவர்களை நினைவுகூர்ந்து அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.