மதுரை:
திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும் அதனைச் சந்திக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை பேரணிக்கு அனுமதி மறுப்பு:
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், “மதுரையில் அமைதிப் பேரணி நடத்துவதாகத்தான் அறிவித்திருந்தோம். பேரணிக்குக் காவல்துறை அனுமதி அளித்திருக்கலாம். ஆனால், வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாகக் கருதுகிறோம். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த மாட்டோம் என்பதால், காவல்துறையின் தடையை மீறிப் பேரணி நடத்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடவில்லை,” என்று கூறினார்.
வழக்கமான இடத்திலேயே தீபம்:
தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதே அரசின் நிலைப்பாடு. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு மாறாக நீதிமன்றத் தீர்ப்பும், உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவும் அமைந்திருக்கின்றன. பாரம்பரியமாக, வழக்கமாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதோ அதே இடத்தில் தீபம் ஏற்றத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. அதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் கூட. இந்து மக்களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசோ கூட்டமைப்புகளோ இல்லை. மத அடிப்படையில் பிரச்சினையைத் தூண்டி நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுக்கவே அரசு போராடுகிறது. இஸ்லாமிய கூட்டமைப்புகளுடன் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தெளிவான நிலைப்பாட்டுடன் போராடுகிறோம்,” எனத் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி உச்சிப்பிள்ளையார் கோயில் மேல் தீபம் ஏற்றினால் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாதா என்ற கேள்விக்கு, “உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தால் அதனைச் சந்திப்பதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது,” என்று அவர் பதிலளித்தார்.
மறுசீராய்வு மனுவும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
முன்னதாக, 2 நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இதனை இறுதி அங்கீகாரமாகவோ அடுத்தடுத்த ஆண்டுகளில் உரிமை கோரவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை ஒரு சாரார் வரவேற்றும் மறு சாரார் எதிர்த்தும் வரும் நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வரவில்லை; நாளை விடுமுறை என்பதால் எப்போது விசாரணைக்கு வரும் என்பது தெரியவில்லை. இதனிடையே, நாளை கார்த்திகை தீபத்தையொட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கத் திருப்பரங்குன்றத்தில் 16 பட்டாலியன் படைகள் வருகை தந்துள்ள நிலையில், மதுரை மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
#Thirumavalavan #VCK #Thiruparankundram #KarthigaiDeepam #SupremeCourt #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive