நியூஸிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 121 ஓவர்களில் 368 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 125 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 486 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 55 ரன்களுடனும், அன்ஷுல் கம்போஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரிஷப் பந்த் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் குவித்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய அன்ஷுல் கம்போஜ் 42 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் வீசிய சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு அன்ஷுல் கம்போஜ், ரிஷப் பந்த் ஜோடி 85 பந்துகளில், 68 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய துருவ் ஜூரல், ரிஷப் பந்த்துடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 135 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் தனது 9-வது சதத்தை விளாசினார். அபாரமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 153 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் விளாசிய நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற நேதன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு ஹாமில்டனில் வங்கதேசத்துக்கு எதிராக நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 715 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.