யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (19.11.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளரும் தமது பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை முன்வைப்பின் (Presentation) ஊடாகச் சமர்ப்பித்ததுடன், திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள், அடைந்துள்ள இலக்குகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
குறிப்பாக, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், நிறைவடைந்த திட்டங்கள், இதுவரை நிறைவடையாத திட்டங்கள் மற்றும் அவற்றை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, திட்டங்களை விரைந்து நிறைவு செய்வதற்கும், அவற்றின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் பிரதி/உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.