மரணித்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நாட்டின் இறைமைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த நடவடிக்கையையும் எங்களால் அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயற்படும்போது நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஆளும் கட்சி உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் இருந்து, இண நல்லிணகத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாட்டுடன் அதன் கீழே நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தை பார்க்கும்போதும், அதில் தனிப்பட்ட இனத்தையோ, பிரதேசத்தையோ சுட்டிக்காட்டி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளபடவில்லை. மாறாக இலங்கை மக்களாகிய அனைத்து தரப்பினரின் தேவைகளை பூர்த்திசெய்கின்ற வரவு செலவு திட்டமாகவே இந்த வரவு செலவு திட்டம் காணப்படுகிறது.
அதனால் இந்த வரவு செலவு திட்டத்தில் இனப்பிரச்சினை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலேயே அதற்கான முற்றுப்புள்ளியை வைத்துவிட்டோம். அதனாலே கடந்த இரண்டு வருடங்களில் இன, மத மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. நீங்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியன் விளைவே இதற்கு காரணமாகும்.
அதேபோன்று தேசிய ஒற்றுமைக்கும், இன நல்லிணத்துக்கும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்தையும் எங்களுக்கு ஊக்குவிக்க முடியாது. என்றாலும் தங்களது இனத்தவர்களை, உறவுகளை நினைவுகூர்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனை அவர்கள் மேற்கொள்ளலாம். ஆனால் அந்த செயற்பாடு, எமது தேசிய ஒற்றுமைக்கும் நாட்டின் இறைமைக்கும் பாதிக்கும் வகையில் இடம்பெறுமாக இருந்தால், அதேபோன்று அந்த நடவடிக்கை இனவாத செயற்பாட்டை அதிகரிக்கும் விடயமாக இருந்தால், அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
இதேவேளை, நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்றுவரைக்கும் மலையகத்தில் பல வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பிரகாரம் மாத்தளையில் இவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மக்களுக்கு கையளிக்க இருக்கிறோம். ஆனால் மலையகத்தைச் சேர்ந்த சில எம்.பிக்கள், நாங்கள் 50 வீடுகளைத்தான் இதுவரை கட்டியிருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். முழு மலையகத்திலும் மொத்தமாக இதுவரை 392 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.