இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா பலப்படுத்துகிறது. இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்க சமஷ்டி அரசின் புலனாய்வுப் பணியகமான Federal Bureau of Investigation (FBI) இன் Charlotte Field Office இனைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்கிறது.
ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு உதவி செய்வதற்காகவும், விசேட தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காகவும், நாடுகடந்த மோசடி வலையமைப்புகளை இனங்கண்டு, அவற்றை சீர்குலைப்பதற்கான அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளின் திறனை பலப்படுத்துவதற்காகவும் ஒரு பிரத்தியேக குழுவை FBI நிறுவியுள்ளது.
இவ்விஜயத்தின் போது, புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்கு உருவாக்கம் போன்ற விடயங்களில் இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன் இணைந்து FBI அதிகாரிகள் பணியாற்றுவர்.
இவ்வொத்துழைப்பானது, பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கும், குற்றச் செயல்களின் தடமறிவதற்கும், இணைய
மோசடிகளுக்குப் பொறுப்பானவர்களுக்கெதிராக வலுவான வழக்குகளை கட்டமைப்பதற்கும் புலனாய்வாளர்களுக்கு உதவி செய்யும். அத்துடன், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் தனது நிலப்பரப்பை தவறாகப் பயன்படுத்தி இணையம் சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான இலங்கையின் திறனையும் இது பலப்படுத்தும்.
“வெளிநாடுகளில் செயற்படும் குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், பில்லியன் கணக்கான டொலர் பணத்தைத் திருடி வருகின்றன. அவர்களைத் தடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார். “FBI இன் புலனாய்வு நிபுணத்துவத்தையும், மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் ஒன்றிணைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கும், குற்றவாளிகளைத் தேடிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், இன்னும் பல அமெரிக்கர்களும், இலங்கையர்களும் இத்தகைய மோசடிகளில் சிக்குவதை தடுப்பதற்கும் எம்மால் இயலுமாக இருக்கும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
புலனாய்வுத் திறன்களை பலப்படுத்துவதற்கும், மோசடி மையங்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும் இலங்கை அதிகாரிகளுடனான FBIஇன் ஒரு தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஆரம்பத்தினை இவ்விஜயம் குறிக்கிறது. FBI உடனான ஒத்துழைப்புடன் பணியாற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இம்முன்முயற்சிக்கு உதவி செய்கிறது.
நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் எங்கெல்லாம் செயற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவர்களைப் பின்தொடர்வதிலும், அமெரிக்க குடிமக்களை நிதிச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதிலும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக சர்வதேச சட்ட அமுலாக்கத் துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது.