மதுரை:
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் யூடியூபர் நிஷாந்தை 5 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் தருமபுரியில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
21 கோடி ரூபாய் கொள்ளை:
கடந்த 12-ஆம் தேதி மதுரை காளவாசல் நேரு நகர் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் 21 கோடி ரூபாய் மதிப்பிலான 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். சிசிடிவி காட்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த் என்பது உறுதியானது. இதையடுத்து, அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு சுமார் 6 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில், நிஷாந்த் தலைமறைவானார்.
பேருந்தில் தப்ப முயன்றபோது கைது:
நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரமடைந்த நிலையில், அவர் தருமபுரி வழியாகச் சேலம் நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பேருந்து நடத்துநர் அளித்த தகவலின் பேரில், அதியமான் கோட்டை போலீசார் சேஷம்பட்டி அருகே பேருந்தை மடக்கினர். போலீசாரைக் கண்டதும் பேருந்தில் இருந்து குதித்துத் தப்ப முயன்ற நிஷாந்தை போலீசார் லாவகமாகப் பிடித்தனர். எஞ்சிய நகைகளை மீட்பதற்காக அவரை மதுரைக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.
#MaduraiHeist #YoutuberNishanth #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive