நாகர்கோவில்:
குதிரைபேரத்தில் ஈடுபட்டது ஆளுங்கட்சியான தவெக தான் என்றும், அதை மூடி மறைக்கும் நோக்கத்திற்காகவே திமுக மீது பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும், குதிரைபேர வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.
அடித்து மிரட்டினர்:
கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ என்.இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினரால் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பரப்பப்பட்டு வரும் குதிரைபேர விவகாரத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. என் பெயரையும் திமுகவையும் இணைத்துச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பொய்யாகப் பரப்பி வருகின்றனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் வைத்துக் காவல்துறையினர் என்னை அடித்து மிரட்டிப் பொய் வாக்குமூலம் அளிக்க வைத்தனர்,” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
சிபிஐ விசாரணை வேண்டும்:
தொடர்ந்து அவர், “இந்த வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமாருக்குப் பதிலாக, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. ஒரு வழக்கறிஞராக, என் கண்ணெதிரே ஒரு பொய் வழக்கு எப்படி ஜோடிக்கப்படுகிறது என்று நான் பார்க்கிறேன். எனக்கு இழைக்கப்பட்டது அநீதி. எனவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால், நிச்சயமாக வழக்குத் தொடுப்பேன். நீதிமன்றத்தில் வாதிட்டு முழுமையாக வெற்றி பெற்று வெளியே வருவேன்,” என்று கூறினார்.
அரசியல் சதுரங்க விளையாட்டு:
மேலும் அவர் கூறுகையில், “இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. திமுக தலைவரையோ அல்லது செந்தில் பாலாஜியையோ நான் ஒருபோதும் பார்க்கவில்லை. கரூர் சம்பவத்திற்காகச் செந்தில் பாலாஜியையும் அன்பில் மகேஸையும் குறிவைத்து, மக்கள் மத்தியில் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசு ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் என்னைக் குறிவைத்து அரசியல் பலிகடா ஆக்குவது மிகவும் வருத்தத்திற்குரியது. என் தாயின் மீது ஆணையாக உண்மையைச் சொல்கிறேன். குதிரைபேரத்தில் ஈடுபட்டது ஆளுங்கட்சியான தவெக தான்; அதை மூடி மறைக்கவே திமுக மீது திட்டமிட்டுப் பழி சுமத்தி ஒரு மாபெரும் நாடகத்தை ஊடகங்களில் அவர்கள் தற்போது அரங்கேற்றுகின்றனர்,” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். குதிரைபேர வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள யூடியூபர் திருநாவுக்கரசு, காவல்துறையின் நேர்மையற்ற விசாரணை மற்றும் இந்த வழக்கின் அரசியல் பின்னணி குறித்து முன்வைத்துள்ள இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.