அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்று (15) இரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில், அச்சேலு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே, மற்றொரு இளைஞரால் கத்தரிக்கோலால் கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இளைஞரும் தாக்குதல் நடத்திய இளைஞரும் நண்பர்கள் எனவும் தெரியவருகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.