சென்னை:
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நேர்மையான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
பெரும் அதிர்ச்சி:
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக் கூடாது. மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம் ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?” என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாரி வேண்டாம் நீதி வேண்டும்:
தொடர்ந்து அவர், “வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகச் சென்றவர், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் தங்க வைத்தது ஏன்? கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, ‘சாரி வேண்டாம்; நீதி வேண்டும்’ என்ற இன்றைய முதலமைச்சர் விஜய், இன்று தம்முடைய ஆட்சியில் ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?” என்று அவர் ஆவேசமாகச் சாடியுள்ளார்.
அரசு வேலை வழங்குக:
மேலும் அவர் கூறுகையில், “குற்றங்களில் சிக்கும் தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் மரண வழக்கு விசாரணை அரசியல் தலையீடின்றி நேர்மையாக நடைபெற வேண்டும். கண்காணிப்புப் பதிவுகள் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட வேண்டும். பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சீமான் தனது அறிக்கையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். காவல் நிலையங்களில் தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இதற்குத் தகுந்த பதில் அளிப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.