சென்னை:
திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் டெண்டர் முறைகேடுகள் குறித்து அவர் புள்ளிவிவரங்களுடன் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.
திருவான்மியூர் உத்தண்டி திட்டம்:
பொதுப்பணித் துறையில் கடந்த 6 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த திமுக ஆட்சியில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பதைக் கண்டறிந்து, தவெக ஆட்சி அமைந்த பின்னர் அந்த டெண்டர் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் ஆன்லைன் டெண்டர் என்பது பெயரளவுக்கு மட்டுமே இருந்தது. அப்போதிருந்த முன்னாள் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே பெரும்பாலான டெண்டர்களை எடுத்துள்ளன. இது குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளோம். இனிமேல் அரசு டெண்டர்களில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்பது அறவே இருக்காது,” என்று தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள் இல்லை:
தொடர்ந்து அவர், “தமிழ்நாடு அனைத்திலும் சரியாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய போலியான அரசு எங்களுடையது கிடையாது. பல அரசு மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பு இல்லை. தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி கூட முறையாக இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளே இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் மட்டும் எல்லா அதிநவீன வசதிகளும் இருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூகநீதித் துறை விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தையும் நாங்கள் முழுமையாகச் சீரமைக்க உள்ளோம். எந்தெந்த இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதோ, அங்கெல்லாம் அதிகாரிகளை ரெட் கலர் ஸ்டிக்கர் ஒட்டச் சொல்லியிருக்கிறோம்,” என்று விளக்கமளித்தார்.
ரூ.2,200 கோடி ஊழல்:
மேலும் அவர் கூறுகையில், “தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர், அதாவது 2025-ஆம் ஆண்டு மட்டும் நெடுஞ்சாலைத் துறையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவது போன்ற பேட்ச் ஒர்க் பணிகளுக்காகவே 2,200 கோடி ரூபாய் ஒதுக்கி திமுக அரசு மெகா ஊழல் செய்துள்ளது. தற்போதைய ஆட்சியில் அரசுத் துறை சார்ந்த டெண்டர்கள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளோம். ஒரு திட்டம் தொடங்கப்படும்போது, குறிப்பிட்ட காலத்தில் அதை முடிக்காத சம்பந்தப்பட்ட டெண்டர் நிறுவனங்களை இனி தயவுதாட்சண்யமின்றி கருப்புப் பட்டியலில் வைக்க உள்ளோம். அவர்கள் எதிர்காலத்தில் எந்த டெண்டரிலும் பங்கேற்க முடியாது என்ற கடுமையான நிலையை உருவாக்குவோம்,” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகக் கூறினார்.