சென்னை:
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெண் அரசு ஊழியருக்கு எதிராக நடந்ததை ஒருபோதும் சரியெனக் கூற முடியாது என்றும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விசிக ஆலோசனைக் கூட்டம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சித் தேர்தல் தொடர்பாகத் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், “வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் விசிகவின் உட்கட்சித் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமூக நீதித்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் தொழிலாளர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்து, அவர்களை வழக்கம் போலப் பணியாற்ற அரசு அனுமதிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
மைல்கற்களில் இந்தி:
தொடர்ந்து அவர், “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தி கட்டாயமாக எழுதப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. அவற்றை உடனடியாக அழிக்கத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். அரசு வழக்கறிஞர் பதவிகளை நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத் தலைவர்களின் பேச்சுகள் அரசியல் நோக்கிலானது என்றாலும், தமிழக அரசு இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு அத்தகைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்:
பின்னர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் ஏற்கனவே பேசியுள்ளனர். ஒரு பெண் அரசு ஊழியருக்கு எதிராக நடந்ததை ஒருபோதும் சரியெனக் கூற முடியாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறியுள்ளோம். இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்திருந்த கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், தான் யாருக்கும் தவறான குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்றும், தன் மீது வீண்பழி சுமத்தப்படுவதாகவும் மறுத்திருந்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் அவர் சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.