சென்னை:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கித் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்.
ஆல் இஸ் வெல் கேக்:
நாளை (நவம்பர் 14) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் முன்கூட்டியே இன்று அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கொளத்தூரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு கேக் மற்றும் தனது புகைப்படத்துடன் ‘ஆல் இஸ் வெல்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை வழங்கி மகிழ்வித்தார். அவருடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி மற்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆகியோரும் மாணவர்களுக்கு கேக் வழங்கினர்.
மழலைகளுடன் கொண்டாட்டம்:
விழாவில் வீரமங்கை வேலுநாச்சியார், நேரு, பாரதியார் வேடமிட்டிருந்த மழலைகளின் பேச்சைக் கேட்டு ரசித்த முதலமைச்சர், அவர்களின் கன்னங்களைக் கிள்ளி வெகுவாகப் பாராட்டினார். மழலையர் வகுப்பில் இருந்த ஒரு மாணவனைத் தூக்கிக் கேக் ஊட்டி விட்ட அவர், மாணவர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தார். பின்னர் அங்கன்வாடி மற்றும் சத்துணவுக் கூடத்திற்குச் சென்று அங்குள்ள உணவு மற்றும் பொருட்களின் தரம் குறித்துக் கேட்டறிந்தார்.
9.27 கோடி ஒதுக்கீடு:
குழந்தைகள் தினத்தையொட்டித் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பேருக்கு கேக் வழங்குவதற்காக மாநில அரசு சார்பில் 9.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 45 கிராம் எடைகொண்ட நான்கு சுவைகளிலான ஸ்பாஞ்ச் கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கடுமையான நிபந்தனைகள்:
மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் மென்மையாகவும், பூஞ்சை மற்றும் கெட்டுப்போன மணம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இல்லாத கேக்குகளாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உறுதியான நிபந்தனைகளை விதித்துள்ளது. கேக்குகள் தனித்தனியாக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 30 நாட்கள் காலாவதி காலம் எஞ்சியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.