சென்னை:
போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கில் செயல்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை:
கடந்த 2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையில் பணம் பெற்றுப் பணி நியமன ஆணை வழங்கியதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 2018-ஆம் ஆண்டில், அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட 2,202 பேருக்கு எதிராகச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜி உட்பட 24 பேருக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.லோகேஷ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உட்பட 22 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
நீதிபதி அதிருப்தி:
தொடர்ந்து வழக்கில் எட்டாவதாகக் குற்றம் சாட்டப்பட்ட குமார் என்பவர் தன்னை விடுவிக்கக் கோரி ‘டிஸ்சார்ஜ்’ மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைக் கண்டு அதிருப்தி அடைந்த நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இம்மாதம் 3-ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் மனு தாக்கல் செய்திருப்பது வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தும் வகையில் உள்ளது. குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்காக இவ்வழக்கைப் பட்டியலிடும் போதெல்லாம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர் ‘டிஸ்சார்ஜ்’ மனுவைத் தாக்கல் செய்து குற்றச்சாட்டுப் பதிவு செய்யவிடாமல் திட்டமிட்டுத் தாமதப்படுத்தி வருகின்றனர்,” என்று சுட்டிக்காட்டினார்.
ஜாமீன் ரத்து எச்சரிக்கை:
மேலும் நீதிபதி, “எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் இனி தனித்தனியாக ‘டிஸ்சார்ஜ்’ மனு தாக்கல் செய்வதை நீதிமன்றம் ஏற்க முடியாது. அனைவரும் கலந்தாலோசித்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்யப் போகிறீர்களா? இல்லையா? என்பது குறித்து எழுத்துப்பூர்வக் குறிப்பானை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரேனும் விசாரணையைத் தாமதப்படுத்தும் செயலில் ஈடுபட்டால், அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்படும்,” என மிகக் கடுமையாக எச்சரித்தார்.
நவம்பர் 17-க்கு ஒத்திவைப்பு:
பின்னர், வழக்கு விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார். மேலும் விசாரணையின்போது, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் உட்பட 10 பேர் அடுத்த விசாரணையின்போது டிஸ்சார்ஜ் மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர். மீதமுள்ள 11 பேர் மனு தாக்கல் செய்யப் போவதில்லை எனக் குறிப்பானை தாக்கல் செய்தனர்.