காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கையாளும்போது, அரச உத்தியோகத்தர்கள் வழமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளையும் இழப்புகளையும் புரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் முக்கியமானதாக இருந்தாலும், அதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனவேதனையைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உரிய ஆறுதலையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டிய பொறுப்பு அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள், வாழ்வாதார உதவியாக அதிகபட்சம் 150,000 ரூபாய் வரையிலான நிதியுதவி மற்றும் மாதாந்தக் கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு உதவித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தாலும், இவை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்பார்க்கும் முழுமையான தீர்வாக அமைந்துவிட முடியாது. அவர்களின் பிரதான எதிர்பார்ப்பு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பான உண்மையையும் உரிய தீர்வையும் அறிந்துகொள்வதாகும்.
பிரதேச செயலாளர்கள் தங்களின் கீழ் பணியாற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் உரிய தெளிவூட்டல்களை வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை அணுகும்போது மிகுந்த கரிசனையுடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட வழிகாட்ட வேண்டும்.
பல ஆண்டுகளாகத் தமது குடும்ப உறுப்பினர்களையும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் வலியை அவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து, தற்காலிக உதவிகளுடன் மட்டுப்படுத்தாமல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.