காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்க நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வலியுறுத்தினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அவர்களது குடும்பங்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதே OMP அலுவலகத்தின் பிரதான நோக்கமாகும். கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் பல குடும்பங்கள் பல தசாப்தங்களாகக் காத்திருக்கின்றன.
அண்மையில் மாத்தறையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவர்களையும் உறவினர்களையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பெண்களும் தமது துயரங்களைப் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த கால உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் கண்டறியப்படும் உண்மைகளை உரிய தரப்புகளிடம் சமர்ப்பித்தல் ஆகியவையே OMP அலுவலகத்தின் பிரதான பணிகளாகும். இழப்பீடுகளை வழங்குவது அதன் நேரடிப் பொறுப்பல்ல. அதற்கென அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்கள் செயற்பட வேண்டியுள்ளன என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசாங்கத்தால் தனித்து இப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதால், சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியமானது. OMP அலுவலகம் தனித்து இயங்க முடியாத நிலையில், அரசாங்க நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வையும் தகவல்களையும் பரந்துபட்ட சமூகத்திற்குக் கொண்டுசென்று, மேலும் பல சிவில் சமூக அமைப்புகளையும் இச்செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களைக் குறைத்து, அவர்களுக்கான உரிய சேவைகள், நிவாரணங்கள் மற்றும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும் என கலாநிதி ஜெஹான் பெரேரா வலியுறுத்தினார்.