ம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு சிறுவர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (03) இரவு சுமார் 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இடைமறித்துச் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பொலிஸார் மீது மோட்டார் சைக்கிளை மோதிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
எனினும், சுதாகரித்துக் கொண்ட பொலிஸார் காயமடைந்த நிலையிலிருந்த இருவரையும் உடனடியாகக் கைது செய்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இரு போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாரினால் புதன்கிழமை (04) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸாரை மோதி விபத்தினை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 17 வயதுடையவர்கள் எனவும், சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் மட்டக்களப்பு கும்புறுமூலையிலுள்ள சிறுவர் சீர்திருத்தக் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்மாந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு வேளைகளில் சாரதி அனுமதிப்பத்திரமின்றியும் தலைக்கவசம் அணியாமலும் சிறுவர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி சாகசங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், இவ்வாறான விபத்துகளைத் தடுக்கப் பெற்றோர்களும் தமது பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.