யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான அவரது மகள் மற்றும் மருமகனுக்கு எதிராகக் காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றில் தனித்தனியாக வாசித்துக் காட்டப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை, படுகொலை செய்தமை மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை ஆராய்ந்த நீதவான், இவ்வழக்கு தொடர்பான சுருக்கமுறையற்ற முதற்கட்ட விசாரணைகள் (Non-summary inquiry) விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவித்ததுடன், சந்தேகநபர்கள் இருவரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீட மூத்த விரிவுரையாளரான 54 வயதுடைய வைத்தியர் தயாளினி திலீபன் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், மார்ச் 21ஆம் திகதி தனக்கிளப்பு காட்டுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.