நல்லாட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொரளை மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு அம்பாந்தோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் திங்கட்கிழமை (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், நீதிவான் நீதிமன்ற விசாரணையும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளதாகவும் நீதிவான் திறந்த மன்றில் அறிவித்திருந்தார்.
இதற்கமைய, இவ்வழக்கின் 35 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை அன்றைய தினம் அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி வழக்கில் இதுவரை 41 பேர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உபாலி கொடிகார, பிரசன்ன ரணவீர மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 35 சந்தேகநபர்கள் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
சுமார் 10 வருடம் அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கு விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தைச் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராகக் எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 41 பேருக்கு எதிராக அம்பாந்தோட்டை பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.