தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த மற்றும் நீர் வடியும் கண்கள்,இருமல்,தும்மல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் தட்டம்மை நோயால் சுமார் 95,000 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே.தடுப்பூசி மூலம் மட்டுமே தட்டம்மையைத் தடுக்க முடியும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்நோய் வராமல் தடுப்பதற்கு 95 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில், உலகளவில் தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் இறப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில் உலகளவில் 1.1 கோடி தட்டம்மை நோயாளிகள் இருந்தனர். இது 2000-ஆம் ஆண்டில் இருந்த 3.8 கோடி என்ற எண்ணிக்கையை விட கணிசமான குறைவாகும்.ஆனால், தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படும் தட்டம்மை தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவதால் உலகின் சில பகுதிகளில் நோய் மீண்டும் பரவி வருகிறது.
‘தி லான்செட்’ மருத்துவ இதழின்படி, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான தட்டம்மை நோய்ப் பரவல்களை உலகம் கண்டுள்ளது.ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு தட்டம்மைத் தொற்றின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம், வடக்கு லண்டனில் உள்ள சில பள்ளிகளில் தட்டம்மை நோய் பரவியதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்.
2026, மார்ச் 15 முதல் வங்காளதேசம் முழுவதும்,100-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் தட்டம்மை நோயால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குழந்தைகளின் உயிர்வாழ்வுக்குத் தடுப்பூசிகள் அடிப்படையானவை. யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) போன்ற சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து, தட்டம்மை மற்றும் ரூபெல்லாவுக்கான அவசர தடுப்பூசித் திட்டத்தை வங்கதேசம் சமீபத்தில் தொடங்கியுள்ளது. ரூபெல்லா என்பது தட்டம்மையைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோயாகும். அதனால், அந்நாட்டில் குழந்தைகளுக்கு அவசர தட்டம்மை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
வங்கதேசத்தின் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மார்ச் 15 முதல் 7,500-க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகளில் 900-க்கும் மேற்பட்டவர்களுக்கு தட்டம்மை இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் வெறும் 125 தட்டம்மை பாதிப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இந்நிலையில், தற்போதைய இந்த பாதிப்பு கணிசமான அதிகரிப்பு என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காளதேசத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் ஒன்பது மாதங்களுக்கும் குறைவான வயதுடையவர்கள். அதனால் வழக்கமான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இன்னும் தகுதி பெறாத இளம் பச்சிளங்குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படுவதாக யூனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது.
வங்கதேசம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரும் சிறப்பு தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.இதுவும், குழத்தைகளிடையே அதிக தட்டம்மை ஏற்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தட்டம்மை தடுப்பூசிக் கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்களால் தட்டம்மை தடுப்பூசிகளுக்குத் வங்கதேசத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான சிறிய இடையூறுகள் காலப்போக்கில் நோய் எதிர்ப்பு இடைவெளிகள் படிப்படியாகக் குவிவதற்கு வழிவகுத்து விடும்.
இதற்கிடையில் தட்டம்மை தடுப்பூசி வங்காளதேசத்தில் உள்ள 30 உபமாவட்டங்கள் (துணை மாவட்டங்கள்) முழுவதும் செயல்படுத்தப்படும் என வங்க அரசு கூறியுள்ளது. மேலும், இது ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான 12 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.வழக்கமான தடுப்பூசிகளைத் தவறவிட்ட மற்றும் கடுமையான நோய் மற்றும் சிக்கல்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட தலைநகரான டாக்கா, நெரிசல் மிகுந்த ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள், காக்ஸ் பஜார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் சிறப்பு கவனம் பெறும் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. மேலும்,தட்டம்மையை தடுக்கும் முறைகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை தீவிரமாக வங்க தேச சுகாதார அதிகாரிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.
தட்டம்மை பாதிப்பிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி தட்டம்மை தடுப்பூசி மட்டுமே.இதனை உணர்ந்து பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.குடும்பங்களும்,பள்ளிகளும் சமூக ஊடகங்களும் இந்நோயினைப் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்த முனைப்பினைக் காட்ட வேண்டும்.தட்டம்மை தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் அரசுகளும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இந்நிலை ஏற்பட்டால் மட்டுமே இனி வரும் காலங்களில் நம் குழந்தைகளை நாம் தட்டம்மை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.