நீர்கொழும்பில் 22 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர BMW ரக சொகுசு காரை முடக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய பணத்தை பயன்படுத்தி தனது மகனின் பெயரில் இந்த காரை கொள்வனவு செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பெறப்பட்ட பணத்தில் குறித்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், குறித்த BMW காரை 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கும் உத்தரவை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் காரை விற்பனை செய்வதற்கு, வேறு நபருக்குக் கைமாற்றுவதற்கு அல்லது வேறு எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுத்துவதற்கு தடுக்கப்படும்.
பணத்தின் மூலத்தைக் கண்டறிவதற்கும் சந்தேகத்திற்குரிய சட்டவிரோத சொத்துக்களைப் பரிசீலிப்பதற்குமான மேல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.