அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (12) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறை கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியில் மற்றுமொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின்போது, குறித்த சங்கிலிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர், சம்பவங்களின் பின்னர் கொழும்பு, கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு பேருந்து சாரதியாகப் பணிபுரிந்து வந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் நேற்று (12) அம்பாறைக்குத் திரும்பியுள்ளதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை விடுதிக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு தங்கச் சங்கிலிகளும் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கல்முனையிலுள்ள குறித்த தங்கக் கடையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, உருக்கப்பட்ட நிலையிலிருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் தொடர்புடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தங்கக் கடையில் பணிபுரிந்த மேலும் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தைப் பெறுமதி ஏழு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.